Village Missionary Movement

கிராம மிஷனரி இயக்கம்


இன்றைய தியானம்(Tamil)  30-01-2021

இன்றைய தியானம்(Tamil)  30-01-2021

நீ எங்கே ஓடுகிறாய்? 

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; ….அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” – மத்தேயு 7:13, 14

நமது அனுதின வாழ்க்கைப் பயணத்தில் நாம் மிக வேகமாக ஓடிக்கொண்டேயிருக்கிறோம். எதை நோக்கி ஓடுகிறோம்? சிறுவர்கள் கல்வியை நோக்கி!... வாலிபர்கள் திருமணத்தை நோக்கி!.... நடுத்தர வயதினர் பதவி, பணம், குடும்பத்தை நோக்கி!... வயது முதிர்ந்தோர் எங்கு போவது, என்ன செய்வது என தெரியாமல் நாட்களைக் கடத்தி, மரணத்தை நோக்கி ஓடுகின்றனர். ஆக மொத்தம் நாம் எல்லோருமே கல்லறையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். சரி, அந்த ஓட்டம் முடிந்தபின் நிச்சயமாக நமக்கு ஒரு பலன் உண்டு. ஒன்று வெற்றி அல்லது தோல்வி! ஒருவன் ஆற்றைக் கடந்து அக்கரைக்கு செல்வதுபோல் நாமும் மரணத்தைக் கடந்து நித்திய ஜீவனையோ நித்திய அழிவையோ பெற்றே ஆகவேண்டும். 

இந்த நித்திய அழிவு உள்ள நரகத்தில் இடம் கிடைப்பதற்கு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை; சும்மா இருந்தால் போதும். ஆனால் நித்திய ஜீவனுள்ளவர்களாய் பரலோகத்திற்கு செல்ல வேண்டுமாயின் அனுமதி சீட்டை இப்பூமியிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். முன்னமே நாம் ரிசர்வேஷன் பண்ணிவிட வேண்டும். அந்த அனுமதி சீட்டே இயேசு கிறிஸ்து தரும் இரட்சிப்பு! அவரே, முடிவுபரியந்தம் நம்மை நிலைநிற்கச் செய்து, அனுதினமும் இரட்சிப்புக்கு ஏதுவாக நடத்தி, நம்மை பரிசுத்தப்படுத்தி, மோட்ச வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள ஆயத்தப்படுத்துகிறவர். இந்த ஆயத்தமில்லாமல் நாம் மரணத்தை சந்திப்போமானால் இரட்சகரை நீதியுள்ள நியாயாதிபதியாய் காணும்போது திகைத்து நிற்போம். “ஆண்டவரே இன்னும் ஒரே ஒரு சந்தர்ப்பம் எனக்குத் தாரும். உலகத்திற்குச் சென்று உம்மை நம்புவேன், விசுவாசிப்பேன், உம்மை ஏற்றுக்கொள்வேன்” என்று கெஞ்சினாலும் அந்த சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது. சாத்தானுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற அக்கினி கடலிலே தள்ளப்படுவோம். நித்திய வேதனையான அந்த இடம் அவ்வளவு பயங்கரமாயிருக்கும்! 

அன்பு சகோதர சகோதரிகளே! மரணத்திற்குப் பின் இருக்கும் வாழ்வை தெரிந்தெடுக்கும் வாய்ப்பு, நம் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எந்த வழியை தெரிந்தெடுக்கப்போகிறீர்கள்? அன்பும் சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த ஆனால் இடுக்கமான வாசலுள்ள பரலோகத்திற்கு செல்லும் வழியையா? அல்லது அழுகையும், பற்கடிப்பும் நிறைந்த நரகத்திற்குச் செல்லும் விசாலமான வழியையா? ஒருவேளை தவறான வழியில் ஓடிக்கொண்டிருப்பீர்களென்றால், இன்றே உங்கள் வழியை மாற்றலாம். நீங்கள் 11ம் வகுப்பில் எடுத்த குரூப்-பை 12ம் வகுப்பில் மாற்றமுடியாது; ஆனால் நீங்கள் உயிரோடு இருக்கும் இந்த நாட்களில் உங்கள் பாவ வழியை விட்டு பரிசுத்த வழிக்கு உங்களை மாற்றலாம். கர்த்தர் உங்களுக்கு உதவிசெய்வார். 
-    Mrs. புவனா தனபாலன் 

ஜெபக்குறிப்பு:
சிறுவர் பங்குதாரர் திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, ஆசீர்வாதமாக இருக்க ஜெபியுங்கள்.

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app: 
தமிழில் பெற -  +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250


Comment As:

Comment (0)